ஓரங்கப்பட்டப்படுகிறாரா அண்ணாமலை…? பவரை குறைக்க திட்டம்.. அதிமுகவுக்காக அமித்ஷா போட்ட மெகா பிளான்..?

Author: Babu Lakshmanan
3 October 2023, 2:39 pm

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியான அரசியலை செய்து வருகிறார். எதிர்கட்சியான திமுகவை மட்டுமல்லாது, கூட்டணியான அதிமுகவுடனும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். ஜெயலலிதா, அண்ணா குறித்து அவர் பேசியது அதிமுகவினரிடையே பொறுமையை இழக்கச் செய்தது. இருதரப்பினரும் பகிரங்கமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இருப்பினும், தன்னுடைய கருத்தில் இருந்து அண்ணாமலை பின்வாங்கவில்லை.

ஒருகட்டத்தில் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அதிமுக அறிவிப்பை வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024ல் மட்டுமல்ல 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை இரு கட்சியினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், பாஜக தேசிய தலைமை இதனை விரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுக – பாஜக முறிவுக்கு பின் முதல்முறையாக அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது, அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலையிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தமிழகத்தில் அதிமுக கூட்டணி முறிவு ஏற்பட்டது பாஜக தேசிய தலைமைக்கு அதிருப்தியையே ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் சுமூகமான முடிவை ஏற்படுத்தி, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருப்பதாகவும், இதன் காரணமாக, அண்ணாமலையிடம் இருந்து சில அதிகாரங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் இடஒதுக்கீடு விவகாரங்களில் அண்ணாமலையை ஒதுங்கி இருக்கச் செய்ய இருப்பதாகவும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லியிலேயே குழு அமைக்கவும் பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், அண்ணாமலை தமிழகம் வந்த பிறகே தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?