கன்னட போதைப்பொருள் நடிகைகளுடன் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு..? புகைப்படங்களை வெளியிட்டு பாஜக கேள்வி..!

9 September 2020, 10:25 am
Congress_Karnataka_With_Drug_Actress_UpdateNews360
Quick Share

பெங்களூரின் மத்திய குற்றப்பிரிவால் விசாரிக்கப்பட்டு வரும் போதைப் பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகை ராகினி திவேதியுடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பு வைத்திருப்பதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டியது. 


செப்டம்பர் 4’ம் தேதி காங்கிரஸ், நடிகை ராகினி திவேதி டர்ன் கோட் எம்.எல்.ஏ நாராயண கவுடாவுக்காக 2019’ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த படங்களை வெளியிட்டது.

நாராயண கவுடா அப்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து பாஜகவுக்கு சென்று, முன்னர் அவர் வென்ற கே.ஆர் பீட் தொகுதியில் போட்டியிட்டார். ராகினி திவேதி மற்றும் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆகியோருடன் நாராயண கவுடாவின் படங்களை காங்கிரஸ் ட்வீட் செய்திருந்தது. நடிகை ராகினி இடைத்தேர்தலின் போது நாராயண கவுடாவுக்காக பிரச்சாரம் செய்திருந்தார்.

இதைவைத்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் போதைப்பொருள் வழக்கு விசாரணையில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.

“போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகை ராகினி திவேதி இன்று கைது செய்யப்பட்டார். பெங்களூரைச் சேர்ந்த பாஜகவின் மூத்த அமைச்சர் ஒருவர் அவரை கைது செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்கள் கூறுகின்றன! பாஜக தலைவர்கள் சம்பந்தப்பட்டால் நியாயமான விசாரணை எப்படி நடக்கும்? ஏன் உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தக்கூடாது.?” என்று கர்நாடக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீவத்ஸா ட்வீட் செய்திருந்தார்.

படங்கள் வெளியான உடனேயே, நாராயண கவுடா, தனக்கு போதைப்பொருள் குறித்த எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

“அவர் போதைப்பொருள் உட்கொள்கிறார் என்று எனக்குத் தெரியாது. எனக்கு அது தெரிந்திருந்தால், எனக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்” என்று நாராயண கவுடா கூறியிருந்தார்.

“ராகினி திவேதி பாஜகவில் உறுப்பினராக இல்லை. தேர்தல் பொறுப்பை பாஜக அவருக்கு வழங்கவில்லை. அவர் தானாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கலாம்” என்று பாஜகவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோருடன் நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரின் படங்களை பாஜக ட்வீட் செய்து, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து கேள்வி எழுப்பியது.

“போதைப்பொருள் வழக்கு தொடர்பாக பாஜக அரசு ஒவ்வொரு அடியிலும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. விசாரணையை திசை திருப்புவதன் மூலம் விசாரணையில் தலையிட காங்கிரஸ் முயற்சிக்கிறது. நடிகர் நடிகைகள் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகளுடன் காணப்படுகிறார்கள். ஆனால் காங்கிரசார் இதில் பாஜகவை இணைப்பது சிரிக்கத்தக்கது. இந்த படங்கள் எதைக் குறிக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களை ட்வீட் செய்து பாஜக கூறியுள்ளது.

Views: - 0

0

0