உ.பி.யில் பா.ஜ.க அமோக வெற்றிப் பெறும்: அமித்ஷா நம்பிக்கை

Author: Udayaraman
1 August 2021, 11:03 pm
Amitsha- updatenews360
Quick Share

உத்தரப் பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல், நாடு முழுவதும் கவனம் பெறும். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 325 இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக மட்டும் தனித்து 312 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார்.இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இது கருதப்படும் என்பதால், சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் வியூகங்களைத் தற்போதே தொடங்கிவிட்டன.

இதனிடையே, லக்னோவில் அமைக்கப்படவுள்ள மாநில தடயவியல் நிறுவனத்தின் பூமி பூஜை விழாவில் உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேச மாநிலம் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதாக தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியில் அமரும் எனக் கூறிய அமித்ஷா, எதிர்க்கட்சிகள் மீண்டும் தோல்வியை சந்திக்க தயாராகுங்கள் என்றும் தெரிவித்தார்.

Views: - 106

0

0