சிஏஏ விதிகள் விரைவில் வெளியீடு..! மத்திய அரசு பாராளுமன்றத்தில் தகவல்..!

2 February 2021, 8:13 pm
CAA_Protest_UpdateNews360
Quick Share

கடந்த 2019 இறுதியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தின் (சிஏஏ) கீழ் விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், சிஏஏ டிசம்பர் 12, 2019 அன்று அறிவிக்கப்பட்டு 2020 ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வந்தது என்றார்.

“குடியுரிமை திருத்த சட்டம், 2019’இன் கீழ் விதிகள் தயாராகி வருகின்றன. சிஏஏ சட்டத்தின் கீழ் இந்த விதிகளை வகுக்க, துணை சட்டம், மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடர்பான குழுக்கள் முறையே ஏப்ரல் 9 மற்றும் ஜூலை 9 வரை கால அவகாசம் அளித்துள்ளன.” என அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் அல்லாத இந்து, சீக்கிய, சமண, பௌத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை விரைவுபடுத்த சி.ஏ.ஏ, 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புக்களைத் தூண்டியது. 

இந்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி டிசம்பர் 12, 2019 அன்று ஒப்புதல் அளித்திருந்தார். இந்தச் சட்டத்தின் கீழ், மூன்று நாடுகளில் மதத் துன்புறுத்தல் காரணமாக 2014 டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வந்த இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சிஏஏ பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பின்னர், நாட்டில் பரவலான எதிர்ப்புக்கள் காணப்பட்டன. சிஏஏவை எதிர்ப்பவர்கள் இது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் அரசியலமைப்பை மீறுவதாகவும் வாதிடுகின்றனர். இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தை குறிவைக்கும் நோக்கில் தேசிய குடிமக்களின் பதிவேடுடன் சிஏஏவுக்கு தொடர்பு உள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்ததோடு, சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை அரசியல் ரீதியாக நடக்கும் போராட்டம் என்று விவரித்தார். இந்தச் சட்டத்தின் காரணமாக எந்த இந்தியனும் குடியுரிமையை இழக்க மாட்டார் என்று அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற பணிகள் குறித்த கையேடு, “சம்பந்தப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் சட்டரீதியான விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் துணை சட்டங்கள் வடிவமைக்கப்படும்” என்று கூறுகிறது.

அமைச்சர்கள் மற்றும் துறைகள் நிர்ணயிக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் விதிகளை வடிவமைக்க முடியாவிட்டால், அத்தகைய நீட்டிப்புக்கான காரணங்களைக் கூறி துணை சட்டக் குழுவிலிருந்து நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.

இந்நிலையில், கொரோனா போன்ற அசாதாரண சூழலில், இதற்கான பணிகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0