திருப்பதி மலையில் கேண்டீன் உரிமையாளர் கடத்தல் : 25 நிமிடங்களில் கும்பலை பிடித்த போலீஸ்!!

9 November 2020, 10:02 am
Kidnap Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்தியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் வந்த கேண்டீன் உரிமையாளரை கடத்திய கும்பலை 25 நிமிடங்கில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஏழுமலையான் தரிசனத்திற்காக குடும்பத்துடன் திருப்பதி மலைக்கு வந்து இருந்த ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஹனுமந்தராவ் என்பவர் திருப்பதி மலையில் உள்ள எஸ்.பி.டி காட்டேஜ் பகுதியில் இருந்து சற்று முன் திடீரென்று காரில் கடத்திச் செல்லப்பட்டார்.

ஹனுமந்தராவ் கடத்தப்படுவதை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் அவசர போலீஸ் 100 க்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். திருப்பதி மலை அடிவாரத்தில் கடத்தல்காரர்களிடமிருந்து அனுமந்தராவை மீட்ட போலீசார் கடத்தல்காரர்களை பிடித்து விசாரணை நடத்துகின்றனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் செயல்படும் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஹனுமந்த ராவ் ஒப்பந்த அடிப்படையில் கேண்டீன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஒருவரிடம் 20 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஹனுமந்த ராவ் ஏமாற்றியிருக்கிறார்.

இது தொடர்பாக மூன்று நாட்களுக்கு முன் பெனுகொண்டா காவல் நிலையத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர் புகார் அளித்தார். அப்போது முதல் ஹனுமந்த ராவ் மாயமாகி விட்டார். எனவே அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் திருப்பதி மலையில் இருப்பது பற்றிய தகவல் அறிந்த பெனுகொண்டாவை சேர்ந்த ஸ்ரீனு, சுரேஷ், குமார் ஆகியோர் திருப்பதி மலைக்கு வந்து காரில் கடத்திச் சென்றனர்.ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சீனு, சுரேஷ், குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

கடத்தல் சம்பவம் நடைபெற்ற 25 நிமிடத்தில் கடத்தல்காரர்களை மடக்கி கைது செய்து ஹனுமந்த ராவை மீட்ட போலீஸார், தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் ஆகியோருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தனது கணவர் கடத்தப்பட்ட உடன் சற்றும் தாமதிக்காமல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்ணுடன் போலீசாருக்கு தகவல் அளித்த அனுமந்த ராவின் மனைவியையும் போலீஸார் பாராட்டினர்.

Views: - 31

0

0