புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைக்கப்படும் மூன்று சுரங்கப்பாதைகள்..! எதற்காகத் தெரியுமா..?

4 March 2021, 12:44 pm
central_vista_project_updatenews360
Quick Share

புதிய நாடாளுமன்ற கட்டுமான தளத்தில் மூன்று நிலத்தடி சுரங்கங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை பிரதமரின் வீடு, துணை ஜனாதிபதியின் வீடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகளை புதிய நாடாளுமன்ற வளாகத்துடன் இணைக்கும் என்று இன்று வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, வி.வி.ஐ.பிக்களுக்கு பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நெறிமுறைகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறைக்கப்படுவதை சுரங்கங்கள் உறுதி செய்யும் எனத் தெரிகிறது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய பாராளுமன்ற கட்டிடம், பொது மத்திய செயலகம், முக்கியத் தலைவர்களுக்கு வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் மறுவடிவமைப்பை முடிக்க அரசாங்கத்தால் கடுமையான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ட்ரல் விஸ்டா திட்டம் நவம்பர் 2021’க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நாடாளுமன்ற கட்டடத்தின் பணிகள் 2022 மார்ச் மாதத்திலும், பொது மத்திய செயலகம் 2024’ஆம் ஆண்டிலும் முடிக்கப்பட உள்ளது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், சவுத் பிளாக் பக்கத்தில் பிரதமருக்கு ஒரு புதிய வீடு மற்றும் அலுவலகம் கட்டப்பட உள்ளது. துணை குடியரசுத் தலைவருக்கு வீடு நார்த் பிளாக்கில் கட்டப்படும். போக்குவரத்து மற்றும் ஷ்ரம் சக்தி பவன்கள் அமைந்துள்ள இடத்தில் எம்.பி.க்களின் அறைகள் கட்டப்படும்.

“சென்ட்ரல் விஸ்டாவில் முன்மொழியப்பட்ட வளர்ச்சியில், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான பொது அணுகலை மேம்படுத்துவதற்கான ஒரு உத்தியாக, உயர் பாதுகாப்பு தேவைப்படும் விஐபிகளின் வழிகள் வழக்கமான பொது இயக்க வழிகளிலிருந்து பிரிக்கப்படுகின்றன.” என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுரங்கங்கள் ஒற்றை வழியாக இருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட நபர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும். இதில் பயணத்திற்கு கோல்ஃப் வண்டிகள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ட்ரல் விஸ்டா அவென்யூ நார்த் மற்றும் சவுத் பிளாக்கிலிருந்து இந்தியா கேட் வரை நீள்கிறது. அதில் ராஜ்பாத், அதன் அருகிலுள்ள புல்வெளிகள் மற்றும் கால்வாய்கள், மரங்களின் வரிசைகள், விஜய் சவுக் மற்றும் இந்தியா கேட் பிளாசா ஆகியவற்றை உள்ளடக்கி 3 கி.மீ நீளத்தில் கட்டமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0