ராமர் பாலம் குறித்த கடலடி ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்..! விரைவில் பணிகள் தொடக்கம்..!

25 January 2021, 3:02 pm
ram_setu_updatenews360
Quick Share

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 48 கி.மீ நீளமுள்ள ராமர் பாலத்தின் தோற்றத்தை தீர்மானிக்க நீருக்கடியில் ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் அல்லது நாலா சேது என்றும் அழைக்கப்படும் இந்த ராமர் பாலம், சுண்ணாம்புக் கற்களின் சங்கிலியாகும். இது பாம்பன் தீவு எனும் ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னார் தீவு வரை செல்கிறது.

பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய இந்து காவியங்களில் ஒன்றான ராமாயணத்தின் காரணமாக இந்த பாலம் மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழு, கடலடியில் ஆய்வு செய்யும் திட்டத்திற்கு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் கோவாவில் உள்ள தேசிய கடல்சார் நிறுவனம் (என்.ஐ.ஓ) ஆகியோரால் நடத்தப்படும் இந்த ஆய்வு, ராமாயண காலத்தை தீர்மானிக்க உதவுகிறது மற்றும் ராமர் பாலம் உருவான விதம் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ள உதவும். ராமர் பாலத்தைச் சுற்றி நீரில் மூழ்கிய வாழ்விடங்கள் உள்ளதா என்பதைக் கண்டறியவும் இது உதவும்.

“ராமாயணத்தின் வரலாற்றுத்தன்மையும் தேதியும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மத்தியில் விவாதத்திற்குரிய விஷயமாகவே இருக்கின்றன. ராமர் பாலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின் தன்மை மற்றும் உருவாக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள அறிவியல் மற்றும் நீருக்கடியில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள இந்த திட்டம் முன்மொழியப்பட்டது.” என்று ஏஎஸ்ஐ தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலேயே ஆராய்ச்சி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய கடல்சார் நிறுவனத்தின் இயக்குனர் சுனில் குமார் சிங் கூறுகையில், தொல்பொருட்கள், ரேடியோமெட்ரிக் மற்றும் தெர்மோலுமினென்சென்ஸ் (டி.எல்) புவியியல் நேர அளவீடு மற்றும் பிற துணை சுற்றுச்சூழல் தரவுகளின் அடிப்படையில் இந்த முன்மொழியப்பட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நீர் மட்டத்திலிருந்து 35 முதல் 40 மீட்டர் வரை வண்டல் மாதிரிகளை சேகரிக்க தேசிய கடல்சார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சிந்து சாதனா அல்லது சிந்து சங்கல்ப் ஆகியவற்றின் ஆராய்ச்சி கப்பல்கள் நிறுத்தப்படும்.

2014’ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிந்து சாத்னா, இந்தியாவின் முதன்முதலில் உள்நாட்டில் கட்டப்பட்ட ஆய்வுக் கப்பலாகும். இந்த கப்பல் கடல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் பல சமீபத்திய உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களைக் கொண்டுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 45 நாட்கள் தொடர்ந்து நீருக்கடியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0