சத்தீஸ்கர் எம்எல்ஏ படுகொலை வழக்கு..! மாவோயிஸ்ட்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..! என்ஐஏ அதிரடி..!

Author: Sekar
2 October 2020, 1:59 pm
NIA_Updatenews360
Quick Share

கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 33 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று தெரிவித்துள்ளது.

33 பேர் மீது ஜக்தல்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் நேற்று என்ஐஏ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். 22 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

என்ஐஏ கைது செய்துள்ள நபர்கள் தாந்தேவாடாவில் வசிக்கும் மட்கா ராம் டாடி, பீமா ராம் டாடி, லிங்கே டாடி, லக்ஷ்மன் ஜெய்ஸ்வால், ரமேஷ் குமார் காஷ்யப் மற்றும் ஹரிபால் சிங் சவுகான் என கூறப்படுகிறது.

இந்த வழக்கு ஒரு ஐ.இ.டி குண்டுவெடிப்பு தொடர்பானது. கடந்த ஆண்டு ஏப்ரல் 9’ஆம் தேதி தாந்தேவாடாவின் குவாக்கொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷியாம்கிரி கிராமத்திற்கு அருகே ஒரு மாவோயிஸ்ட் கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் அப்போதைய எம்.எல்.ஏ.வான பீமா மண்டவி கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் சத்தீஸ்கர் ஆயுதப்படை போலீசார் நான்கு பேரும் பலியாகினர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்தனர்.

சத்தீஸ்கர் காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

என்ஐஏ செய்தித் தொடர்பாளர், “ஆரம்பத்தில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. பல சாட்சிகளை ஆராய்ந்த பின்னர், சரணடைந்த மாவோயிஸ்டுகளின் வாக்குமூலம் மற்றும் கடுமையான தொழில்நுட்ப பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது.” எனத் தெரிவித்தார்.

“விசாரணையின் போது, மாவோயிஸ்டுகளுக்கு தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆதரவு, மின்சார கம்பிகள் மற்றும் எஃகு கொள்கலன்கள் ஆகியவற்றை வழங்கிய மட்கா, பீமா, லிங்கே, லக்ஷ்மன், ரமேஷ் மற்றும் ஹரிபால் ஆகிய 6 நபர்களை என்ஐஏ கைது செய்தது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

“அப்போதைய தாந்தேவாடா எம்.எல்.ஏ.வைக் கொல்லும் முடிவு 2018 டிசம்பரில் மேற்கு பஸ்தாரில் நடைபெற்ற தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்று என்ஐஏ உறுதி செய்துள்ளது” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Views: - 42

0

0