106 நாள் சிறை வாசம் ஓவர்…! திகாரில் இருந்து வெளியே வந்தார் ப. சிதம்பரம்! தொண்டர்கள் குஷி

4 December 2019, 9:05 pm
Quick Share

டெல்லி: 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு ஜாமீன் கிடைத்த ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பல ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து சிதம்பரம் தரப்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல கட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவருக்கு உச்ச நீதிமன்றம ஜாமீன் வழங்கியது.

2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்கள் ஜாமீன், வெளிநாடு செல்லக்கூடாது, பேட்டி அளிக்கக்கூடாது என முக்கிய நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

சட்ட நடைமுறைகள் முடிந்த நிலையில், 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு திகார் சிறையில் இருந்து அவர் விடுதலையானார். சிறை வாசலில் அவரை காண காத்திருந்த ஏராளமான தொண்டர்கள் உற்சாகமாக காணப்பட்டனர்.

சிறைவாசலில் இருந்து வெளிவந்த சிதம்பரத்தை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். உடல்நிலை முழுவதுமாக தேறிய பின்னரே நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.