1000 கோடி ஹவாலா மோசடி..! சீனாவைச் சேர்ந்த உளவாளி லுயோ சாங் கைது..! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்..!

12 August 2020, 7:53 pm
Luo_Sang_Chinese_Spy_UpdateNews360
Quick Share

ஹவாலா பரிவர்த்தனைகளில் பண மோசடி மற்றும் போலி சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வருமான வரித் துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த லூயோ சாங், உளவு குற்றச்சாட்டில் இன்று டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் சார்லி பெங் என்ற போலி அடையாளத்தை உருவாக்கி தங்கி வந்த லுயோ சாங், முன்னதாக உளவு குற்றச்சாட்டில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் 2018 செப்டம்பரில் கைது செய்யப்பட்டார் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சார்லி பெங் சீனாவுக்காக உளவு பார்த்ததாகவும், பணமோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை வணிகங்களை நடத்தி வருவதாகவும் டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த சார்லி பெங் ஒரு இந்திய பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக ஒரு மணிப்பூரி பெண்ணை முன்பு திருமணம் செய்து கொண்டார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சீன நாட்டவர் மேலும் பண பரிமாற்றம் சேவைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சார்லி பெங்கிற்கு மற்ற ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் இந்தியாவில் பணமோசடி குற்றவியல் வலையமைப்பிலும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது, இது தொடர்பாக போலீசார் ஆதாரங்களை தோண்டி எடுக்க முயற்சிக்கின்றனர்.

நேற்று, இந்தியாவின் வருமான வரித்துறை டெல்லி, காசியாபாத் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் 21 இடங்களில் தேடுதல் நடத்தியது.

மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) இது தொடர்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், “சில சீன நபர்களும் அவர்களது இந்திய கூட்டாளிகளும் தொடர்ச்சியான ஷெல் நிறுவனங்களின் மூலம் பணமோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டனர் என்ற நம்பகமான தகவலின் அடிப்படையில்,இந்த சீன நிறுவனங்களின் பல்வேறு வளாகங்களில், அவர்களின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் இரண்டு வங்கி ஊழியர்கள் ஒரு தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிபிடிடி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சீன நாட்டினர் 40’க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை உருவாக்கி ரூ 1000 கோடி ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், ஹவாலா பரிவர்த்தனைகள் மற்றும் பணமோசடி தொடர்பான ஆவணங்களில் வங்கி ஊழியர்கள் மற்றும் பட்டய கணக்காளர்களின் செயல்பாடுகளும் தெரியவந்துள்ளன.

இந்த சோதனையில், சார்லி பெங் என்ற போலி அடையாளத்தை எடுத்த சீன நாட்டைச் சேர்ந்த லூயோ சாங்கின் பெயர் வெளிப்பட்டது. சிபிடிடி படி, அவர் 8-10 வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறார் மற்றும் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹவாலா நடவடிக்கைகளில் போலி சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தினார் என தெரிய வந்துள்ளது.

நாட்டில் சீன முதலீடுகள் குறித்த ஆய்வை இந்தியா கடுமையாக்கியதோடு, இந்தியாவில் உள்ள சீனத் தொடர்புகளை முழுமையாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0