கேரள தங்கக் கடத்தலுக்கும் பெங்களூர் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பு..? சிபிஐ விசாரணை கோரும் காங்கிரஸ்..!
5 September 2020, 6:14 pmகேரள தங்கக் கடத்தல் வழக்குக்கும் பெங்களூரில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியதுடன், இது தொடர்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தியது.
“கேரள தங்கக் கடத்தல் வழக்கிற்கும் பெங்களூரில் சிக்கியுள்ள போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவிற்கும் இடையே ஒரு தெளிவான தொடர்பு உள்ளது. இந்த வழக்கை முறையாக விசாரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.
கேரள சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான சென்னிதாலா மேலும், “இதைவிட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளதுதான்.” என்று தெரிவித்துள்ளார்.
“தங்கக் கடத்தல் வழக்கில் பிரதான குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கேரளாவிலிருந்து தப்பித்து பெங்களூரை அடைந்தார். சமீபத்தில் வெடித்த போதை மருந்து மாஃபியாவும் அங்கிருந்து இயங்கியது. இப்போது வெளிவந்தவற்றிலிருந்து, இவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அனூப் முகமதுவை தனக்குத் தெரியும் என்று பாலகிருஷ்ணனின் மகனே வெளிப்படுத்தியிருந்தார். இது ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு.” என்று சென்னிதலா கூறினார்.
கேரள தங்கக் கடத்தலில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் முதல்வர் அலுவலகம் சிக்கிய நிலையில், தற்போது கர்நாடக போதைப்பொருள் கடத்தல் வழக்கிலும் கேரள கம்யூனிஸ்ட் தொடர்பு குறித்து தகவல் வெளியாகியிருப்பது கேரள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0