ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் : ஆந்திர அரசு அறிவிப்பு
Author: Babu Lakshmanan11 December 2021, 1:08 pm
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் பிரிகேடியர் லிட்டரின் இறுதிச் சடங்குகள் ராணுவ மரியாதையுடன் நேற்று நடைபெற்றது.
அதே சமயம், விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணிகள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில், கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இவர்களின் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடக்கிறது.
இந்நிலையில்,குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சத்தை நிவாரணமாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். உயிரிழந்த சாய் தேஜா அவர்கள் முப்படைத்தளபதி பிபின் ராவத்தின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவர் எனவும் தெரிவித்துள்ளது.
0
0