“கூட்டணி வைக்க தகுதியே இல்லாத கட்சி காங்கிரஸ்”..! கடுப்பான கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி..!

Author: Sekar
1 October 2020, 8:08 pm
H_D_Kumaraswamy_UpdateNews360
Quick Share

மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச் டி குமாரசாமி முன்னாள் கூட்டணிக் கட்சியான காங்கிரசை இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி வைக்க தகுதியான கட்சி அல்ல என்றும் அது கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என்றும் கூறினார்.

நவம்பர் 3’ம் தேதி மாநிலத்தின் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதச் சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணியை கர்நாடக காங்கிரஸ் நிராகரித்த ஒரு நாள் கழித்து, முன்னாள் முதல்வர் குமாரசாமியும் கூட்டணியிலிருந்து பின்வாங்கியுள்ளார். காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்தார்.

“காங்கிரசுடன் கூட்டணி வைக்க மதச் சார்பற்ற ஜனதா தளத்திலிருந்து யார் முன்மொழிந்தார்கள்? 2018 சட்டமன்றத்திற்குப் பிறகு எச்டி தேவேகவுடாவின் கதவைத் தட்டியதைப் போல நாங்கள் யாரும் காங்கிரசின் கதவுகளைத் தட்டவில்லை.” என குமாரசாமி ட்வீட் செய்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மதச் சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் பிணைப்பை ஏற்படுத்தியதை அவர் குறிப்பிட்டார். அதன் கீழ் அவர் கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார். கடந்த ஆண்டு இரு கட்சிகளிலிருந்தும் எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியினரின் கிளர்ச்சியைத் தொடர்ந்து இது கவிழ்ந்தது.

“காங்கிரஸ் ஒரு கூட்டணிக்கு தகுதியான கட்சி அல்ல. தனது தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்தியது, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களை கட்சிக்குள் கவர்ந்திழுப்பது, மகாராஷ்டிராவில் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற முயற்சிகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

“கூட்டணி தர்மத்தை மதிக்காத காங்கிரஸுடன் ஒரு கூட்டணி எப்போதும் இருக்க முடியாது” என்று குமாரசாமி கூறினார்.

“கர்நாடக மாநிலத்தில் கூட்டணி குறித்த பேச்சு வந்தால், அதில் காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை இணைத்து பேசக்கூடாது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் எனது தந்தை தேவேகவுடா ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி அரசியல் மைலேஜ் எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்க வேண்டாம்.” என்று அவர் கூறினார்.

Views: - 35

0

0