“அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சி இருக்கையில்தான் அமரும்” – குலாம் நபி ஆசாத்..!

28 August 2020, 8:53 am
Quick Share

கட்சிக்குள் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தவில்லை என்றால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்கட்சி இருக்கையில்தான் அமரவேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் சமீப காலமாக ஏற்பட்டு வந்த சலசலப்பு சில நாட்களுக்கு முன்னர் உச்சத்தை தொட்டது. கட்சியின் தலைமையை மாற்றக்கோரியும், முழு நேர பணியில் உள்ள ஒரு தலைமைக்கான அவசியத்தையும் கடிதம் மூலமாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் 24 பேர் கட்சியின் தலைவருக்கு தெரிவித்திருந்தனர்.

இதில் முதலில் கையொப்பமிட்டவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், மாற்று தலைமையின் தேர்தலுக்கான கோரிக்கையை முன்மொழிந்திருந்தாக அவர் கூறியுள்ளார். மேலும், மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருக்கு கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் ஒரு சதவிகித ஆதரவு கூட இல்லையென பகிரங்கமாக கூறியுள்ளார். இக்கருத்து தற்போது பெரும் அதிர்வலைகளை கட்சிக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டும் இன்றி, மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், தொகுதித் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் செயற்குழுவைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தாம் அளித்த கடிதத்தில் அவர் பரிந்துரைத்துள்ளாக கூறிய அவர், இது நடைபெறவில்லை என்றால், காங்கிரஸ் கட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர் கட்சி இருக்கையில்தான் அமரும் என கூறினார்.

இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே, அடுத்த ஆறு மாதங்களில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) அமர்வு வரும் வரை சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இருப்பார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடிதம் எழுதுபவர்களின் குறைகளை கட்சி ஆராயும் என்றும் கட்சியின் தைலைம முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 28

0

0