வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: டெல்லியில் காங்கிரசார் பேரணி..!!

15 January 2021, 5:39 pm
delhi protest
Quick Share

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து தற்போது டெல்லி காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெறப்பட்டு குடியரசு தலைவரிடம் கொடுக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து இன்று மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர சமூக வலைதளங்களிலும் இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0