சாத்தியமாகுமா காங்கிரஸ் 2.0..? PK போட்ட கண்டிஷன்ஸ்… அதிர்ச்சியில் சோனியா… புது நம்பிக்கையில் மூத்த அதிருப்தி தலைவர்கள்!!

Author: Babu Lakshmanan
22 April 2022, 6:30 pm
Quick Share

2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்பதே எட்டாக் கனியாக இருந்து வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் படுதோல்வியே சந்தித்தது. இதனால், பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் என்ற பிம்பம் காணாமல் போய் விட்டது.

எனவே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர், காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்க தனித்தனியே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sonia_Rahul_Manmohan_UpdateNews360

அதுமட்டுமில்லாமல், திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளிடையேயும் காங்கிரஸின் செல்வாக்கு குறைந்து கொண்டே செல்வதையும் காண முடிகிறது.

இவை அத்தனைக்கும் மேலாக காங்கிரஸ் கட்சிக்கு வலுமையான தலைமை இல்லாததே, கட்சியின் அழிவுக்கு காரணம் என்று குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். காங்கிரசை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பழையபடி எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் ராஜஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதில் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, காங்கிரஸ் உள்கட்சி தேர்தலையும் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

Sonia_Gandhi_UpdateNews360

இந்த நிலையில், சோனியாவுக்கு இன்னும் ஊக்கம் அளிக்கும் விதமாக, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்காக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல முறை சோனியா காந்தியை அவர் சந்தித்து தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பின் போது, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்வதற்காக வியூகங்களை சோனியாவிடம் பிரசாந்த் கிஷோர் எடுத்துரைத்ததாக தெரிகிறது. மேலும், 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக் காட்டினார்.

அதுமட்டுமில்லாமல், இந்த வியூகங்களை செயல்படுத்தி காங்கிரசை வலுப்படுத்த வேண்டுமென்றால், கட்சியில் தனக்கு உரிய பதவி தந்தால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும் என்ற கண்டிஷனையும் அவர் போட்டுள்ளார்.

இந்நிலையில் 85 பக்க விளக்கக்காட்சியின்படி பிரசாந்த் கிஷோர் சுட்டிக்காட்டிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் காந்தி குடும்பம் அல்லாதவர் கட்சித் தலைவராக இருந்தால் “உயர்ந்த” தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, காந்தி குடும்பம் அல்லாதவர் காங்கிரஸ் தலைவராகவும், சோனியாவை கூட்டணி தலைவராகவும், ராகுல் பாராளுமன்ற கட்சி வாரியத் தலைவராகவும், பிரியங்கா பொதுச் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளராகவும் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக ராகுல் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் மக்களின் குரலை திறம்பட பிரதிநிதித்துவப்படுத்தி, மோடிக்கு எதிராக அவரை களமிறக்க முடியும்.

காங்கிரஸ் கட்சி 2014 முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு நாடு தழுவிய போராட்டத்தையோ அல்லது போராட்டத்தையோ நடத்தவில்லை. 1990 இல் ராஜீவ் காந்தியால் மேற்கொள்ளப்பட்ட பாரத யாத்திரைதான் கடைசி வெகுஜன மக்கள் பிரச்சாரம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே காங்கிரசில் பதவி. அனைத்து மட்டங்களிலும் தேர்தல் மூலம் அமைப்புகளை மறுசீரமைத்தல். 15,000 அடிமட்டத் தலைவர்களைக் கண்டறிந்து இந்தியா முழுவதும் 1 கோடி காங்கிரஸ் தொண்டர்களை களப்பணியில் ஈடுபட செய்தல்.

200+ ஒத்த எண்ணம் கொண்ட சிவில் சமூக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அவர்களை ஒருங்கிணைத்தல், கருத்து வேறுபாடுகளை களைந்து இணைந்து செயல்படுதலை உறுதி செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் கொடுத்துள்ள இந்த வியூகங்களை ஆராய 3 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார். இந்த திட்டங்கள் உண்மையில் காங்கிரஸிற்கு பயனுள்ளதா, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் இணைக்கலாமா என்பது குறித்து அவர்கள் ஒரு வாரத்திற்குள் அளிக்கும் அறிக்கையை வைத்து சோனியா காந்தி முடிவெடுப்பார்.

எப்படியிருந்தாலும், சோனியா குடும்பத்திடம் இருந்து காங்கிரஸ் கட்சி விலக்கி வைக்கப்படப் போவது உறுதியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்து, அவரது இந்த கண்டிஷன்களை சோனியா ஏற்று நடப்பாரா..? அல்லது தங்கள் கட்சியில் உள்ள குறைகளை தானே களையெடுத்து, கட்சியை தன்வசமே வைத்துக் கொள்வாரா..? என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிய வந்துவிடும்.

Views: - 795

0

0