கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்: கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய மாநில அரசு..!!

29 January 2021, 4:59 pm
kerala gvt - updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக போலீஸ் கண்காணிப்பு கேரளாவில் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவ தொடங்கிய போது கேரள மாநிலத்தில் தான் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது. முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக நோய் பாதிப்பு மேலும் குறையத் தொடங்கியது. இதையடுத்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன.

சுற்றுலா மையங்கள், கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வழக்கம்போல் நடமாட தொடங்கினர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

மாநிலம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 5ஆயிரத்து 771பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலை தடுக்க நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை அதிகரித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரக்கூடிய மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கட்சி பொதுக்கூட்டங்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே பங்கேற்க செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஓட்டல்கள் மற்றும் கடைகளை இரவு 10 மணிக்குள் மூடிவிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு பயணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதுமட்டுமின்றி பொதுஇடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கும் விதமாக போலீஸ் கண்காணிப்பு கேரளாவில் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் அதிகம் கூடக்கூடிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் மாநிலம் முழுவதும் 25ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Views: - 0

0

0