கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 5 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா உறுதி..!!

15 April 2021, 6:57 pm
kumbamela start - updatenews360
Quick Share

ஹரித்வார்: கும்பமேளா நடந்து வரும் ஹரித்வாரில் கடந்த 5 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹா கும்பமேளா திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 2010க்கு பிறகு இந்தாண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கும்பமேளா விழா தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுவதும் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்க கொரோனா இல்லை என்கிற சான்று வேண்டும்.

தனிநபர் இடைவெளி, முக்கவசம் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வதால் கூட்டத்தினரை சமாளிக்க முடியாத நிலை உள்ளது. இன்று கும்பமேளாவின் முக்கிய நாள் என்பதால் காலை முதல் பக்தர்கள், சாதுக்கள் உட்பட மிகப்பெரிய கூட்டத்தினர் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவில் நேற்று மட்டும் சுமார் 14 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் இன்று வரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 751 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. அதில், 2,167 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநில அரசின் கட்டுப்பாட்டு அறை தகவலின்படி,
ஏப்., 10 ல் 254 பேருக்கும், ஏப்., 11ல் 386 பேருக்கும், ஏப்.,12ல் 408 பேருக்கும், ஏப்.,13ல் 594 பேருக்கும், ஏப்.,14ல் 525 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

Views: - 66

1

0