கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படத்தை நீக்கக்கோரியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

Author: Babu Lakshmanan
21 December 2021, 6:16 pm
kerala_highcourt_updatenews360
Quick Share

திருவனந்தபுரம் : கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனுதாரரின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மற்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் அந்தந்த பிரதமர்களின் புகைப்படங்களை அச்சிடுவதில்லை என தெரிவித்தார். அவர்களெல்லாம் தங்கள் பிரதமரை நினைத்து பெருமைப்படாமல் இருக்கலாம் என நீதிபதி பதில் தந்தார்.

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிரதமரின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூட காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்தது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது உரிமை மீறிய செயல் என்று கேரளாவைச் சேர்ந்த தகவல் பெறும் உரிமை ஆர்வலரான பீட்டர் மயிலிபரம்பில் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்த போது, பிரதமர் என்பவர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும், அவருடைய படத்தை சான்றிதழில் அச்சிடுவதில் என்ன தவறு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், பிற நாடுகளில் எந்த பிரதமரின் புகைப்படமும் இடம்பெறவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், அவர்களெல்லாம் நமது பிரதமரை பற்றி பெருமைப்படாமல் இருக்கலாம் என்று பதிலளித்ததோடு, யாரும் ஆட்சேபம் தெரிவிக்காத போது உங்களுக்கு மட்டும் என்ன பிரச்னை என்றும், இந்த வழக்கை ஏற்பதற்கு ஏதேனும் முகாந்திரம் உள்ளதா என்பதை பார்த்து முடிவு செய்யப்படும் என்று கூறினர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்த மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தெரிவித்தார். மனுதாரர் 6 வார காலத்துக்குள் அபராத பணத்தை செலுத்தாவிட்டால், அவரின் சொத்துக்களை விற்று அந்த பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Views: - 301

0

0