கொரோனா நோயாளிகளை குப்பை வண்டியில் தள்ளிச்செல்லும் கொடுமை.!

3 August 2020, 7:49 pm
Andhra Corona - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாமல் குப்பை வண்டியில் அழைத்து செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்த நபர்களின் உடல்நிலை பொக்லைன், குப்பை வண்டிகள் ஆகியவற்றில் ஏற்றி சென்று அடக்கம் செய்த சம்பவங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள ஜனகாப்பு பேட்டை கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட மூன்றுபேரை அதிகாரிகள் குப்பை அள்ளும் வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் இன்று நடைபெற்றது.

போதுமான அளவில் ஆம்புலன்ஸ்கள் இல்லாத காரணத்தால் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் நோயாளிகளுக்கு ஏற்படும் அவலத்தை அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு நோயாளி வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய செல்பி வீடியோவில், சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர் படுக்கையில் இருந்து தவறி கீழே விழுந்து விட்ட நிலையில் அவரை தூக்கி மீண்டும் படுக்க வைப்பதற்கு கூட ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை.
நீண்ட நேரம் கழித்து அங்கு வந்த ஊழியர்கள் அந்தப் பெண்ணை தூக்கி மீண்டும் படுக்கையில் படுக்க வைத்தனர்.

தொற்று காரணமாக சிகிச்சைக்கு வருபவர்கள் யாராவது மரணமடைந்து விட்டால் அவரின் படுக்கையை சுத்தம் செய்யாமல் அப்படியே அடுத்து வரும் நோயாளிக்கு ஒதுக்கி கொடுக்கின்றனர். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொரோனா தொற்று ஏற்பட்ட மக்கள் பயப்பட தேவையில்லை என்று கூறுகிறார்.

ஆனால் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் நடை பெறும் இது போன்ற சம்பவங்கள் காரணமாக தற்போது சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.