என் அப்பா தான் உண்மையான ஹீரோ! வைரல் டிஎஸ்பி பளீர்

4 February 2021, 8:50 am
Quick Share

டிஎஸ்பி.,யாக இருக்கும் ஜெஸி பிரசாந்திக்கு, இன்ஸ்பெக்டராக இருக்கும் அவரது அப்பா சல்யூட் அடித்த சம்பவம் சமீபத்தில் வைரலாகி இருந்த நிலையில், தன்னுடைய பணி அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஜெஸி. அதில் தன் அப்பா தான் உண்மையான ஹீரோ என புகழ்ந்துள்ளார்.

ஆந்திராவில், திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷ்யாம் சுந்தர். இவரது மக்கள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி. 2018 ஆம் ஆண்டு நடந்த போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று, குண்டூர் மாவட்டத்தில் காவல் உதவிக் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி) பணியில் இருந்து வருகிறார். பணியின் அடிப்படையில், ஜெஸ்ஸி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார்.

கடந்த மாதம், காவல்துறை சார்பில் திருப்பதியில் உள்ள, காவல் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஜெஸ்ஸி பிரசாந்தி சீருடையில் வந்திருந்தார். பல்வேறு தரப்பு அதிகாரிகளை வரவேற்கும் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், தனது மகள் பிரசாந்தி சீருடையில் வந்துள்ளதைப் பார்த்து சல்யூட் அடித்து வரவேற்றார். இது வைரலாக பரவி இருந்தது. இந்நிலையில், தனது பணி அனுபவம் குறித்து, ஜெஸி மனம் திறந்து பேசியுள்ளார்.

ஹூமன்ஸ் ஆப் பாம்பே என்ற இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: என் தந்தை தான் எனக்கு எப்போதும் ஹீரோ. அவருடைய கடின உழைப்பை பார்த்து பாடம் கற்றுக் கொண்டு தான், நான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். சிறுவயதில் நான் படுக்கையில் இருந்து எழும் போது, போலீஸ் சீருடையுடன் என் அப்பா பணிக்கு கிளம்ப தயாராக இருப்பார். அவர் ரோந்து பணிக்கு சென்ற போது, ஒருநாள் நானும் அவருடன் சென்றேன். அப்போது அவருக்கு அனைவரும் சல்யூட் அடித்தனர். அன்றிலிருந்து நானும் அவருக்கு சல்யூட் அடிக்க துவங்கிவிட்டேன்.

வளர்ந்தபின், அப்பா தினமும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொண்டேன். பலநாட்கள் அவர் தூக்கத்தை தொலைத்திருக்கிறார். உணவு சாப்பிடாமல் இருந்திருக்கிறார். போலீஸ் சீருடை குறித்து அவர் கூறும் போது, அந்த உடை விலை மதிப்பற்றது எனவும் அனைவரும் இதனை மதிக்க வேண்டும் எனவும் கூறுவார். அவரால் ஈர்க்கப்பட்ட நான், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரானேன். நான் தேர்ச்சி பெற்றதும் என் முன், என் அப்பா கண்கலங்கி நின்றார்.

நான் ரோந்து சென்றபோது, அங்கு பணியில் இருந்த என் அப்பா எனக்கு சல்யூட் அடித்தார். அதுதான் வைரலானது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0