தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் : மத்திய அரசு விளக்கம்

Author: kavin kumar
17 January 2022, 11:42 pm
Quick Share

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்த அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது.இதனிடையே, தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இடம் பெற்றால்தான் அனுமதிப்போம் என கூறி தமிழக அலங்கார ஊர்தியை நிபுணர் குழு நிராகரித்தது. மேலும், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர் குழு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “குடியரசு தின அணிவகுப்பில் விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய தமிழ்நாட்டின் ஊர்தி மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், குடியரசு தின விழாவில், தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகளை உரிய விவாதங்களுக்குப் பிறகே நிபுணர் குழு நிராகரித்துள்ளது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Views: - 332

0

0