ஹைகோர்ட்டாவது ஸ்டேயாவது..! மூன்று தலைநகரங்களுக்கான பணிகள் ஜரூர்..! ஜெகன் மோகன் அரசு அதிரடி..!

16 August 2020, 12:19 am
YSR_jegan_Mohan_Reddy_UpdateNews360
Quick Share

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் நிர்வாக தலைநகரத்திற்கும், கர்னூலில் நீதித்துறை தலைநகருக்கும் அடிக்கல் நாட்டுவதாக அறிவித்தார்.

மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்க சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து 55 பொது நலன் வழக்குகளை மாநில உயர் நீதிமன்றம் விசாரித்து வருவதற்கு மத்தியில்,  விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற 74’வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜெகனின் அறிவிப்பு வந்துள்ளது.

மூவர்ணக் கொடியை ஏற்றிய பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், மாநிலத்தின் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், மூன்று பிராந்தியங்களுக்கும் நீதி வழங்குவதற்கும் மூன்று தலைநகரங்களை நிறுவுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

2014’ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஆந்திராவை இரண்டாகப் பிரித்திருப்பது மாநில மக்கள் மீது ஆழ்ந்த காயங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளனர். மூன்று தலைநகரங்களை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் மூன்று பிராந்தியங்களிலும் வளர்ச்சி பரவலாக்கம் மற்றும் சமநிலையான வளர்ச்சி ஆகியவை ஆந்திராவிற்கு பிளவுபடுவதால் ஏற்பட்ட அநீதியை நீக்குவதற்கான ஒரே வழியாகும்.” என்று ஜெகன் கூறினார்.

விசாகப்பட்டினத்தில் நிர்வாக தலைநகரம் மற்றும் கர்னூலில் நீதித்துறை தலைநகரம் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டுதல் மிக விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

விசாகப்பட்டினத்தில் நிர்வாகத் தலைநகரைக் கட்டுவதற்கு ஆகஸ்ட் 16’ம் தேதி அடிக்கல் நாட்டும் அவரது அரசாங்கத்தின் திட்டம் மற்றும் மூன்று தலைநகரத் திட்டத்திற்கான நடவடிக்கைகளை ஆகஸ்ட் 27 வரை நிறுத்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசாங்கம் தடையை விலக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை இதுவரை எடுக்கவில்லை.

ஆந்திராவிற்கான சிறப்பு வகை அந்தஸ்தை அடைவதற்கான தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார்.

“இது பாராளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியாகும். இன்று, மத்திய அரசிற்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. நிலைமை மாறும் என்றும், கடவுளின் கிருபையால், எங்களுக்கு சிறப்பு வகை அந்தஸ்து கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.” என்று அவர் கூறினார். தனது அரசாங்கம் அந்த திசையில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என மேலும் தெரிவித்தார்.