மம்தா பானர்ஜிக்கு அடிமேல் அடி..! மேலும் ஒரு எம்எல்ஏ கட்சியிலிருந்து விலகல்..!

1 February 2021, 8:20 pm
dipak_haldar_updatenews360
Quick Share

மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சியின் கூடாரத்தில் இருந்து தலைவர்கள் வெளியேறுவது தினசரி வாடிக்கையாக மாறிவிட்டது. இன்று புதிய திருப்பமாக, டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்எல்ஏவும் திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவருமான தீபக் ஹல்தார் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

ராஜீப் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ பதவியில் இருந்து விலகிய சில நாட்களுக்குப் பிறகு, தீபக் ஹல்தார் இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளார். ஆனால் கட்சியிலிருந்து வெளியேறிய மற்றவர்களைப் பின்பற்றி பாஜக முகாமில் சேருவது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் இருந்து வெளியேறும் போது, ​​ஹல்தார் கட்சித் தலைமை தன்னை பொதுமக்ககளுக்காக வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்று கூறி கட்சியைக் கண்டித்தார்.

“நான் இரண்டு முறை எம்.எல்.ஏ. பதவியில் இருந்துள்ளேன். ஆனால், 2017’ஆம் ஆண்டு முதல், நான் மக்களுக்காக சரியாக வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. தலைமைக்கு இது குறித்து தகவல் கொடுத்த போதிலும், நிலைமையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த கட்சி வேலைத்திட்டம் குறித்தும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. எனது தொகுதி மக்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நான் பதிலளிக்க வேண்டியுள்ளது. எனவே கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனது ராஜினாமாவை விரைவில் மாவட்ட மற்றும் மாநிலத் தலைவருக்கு அனுப்புவேன்.” என அவர் கூறினார்.

முன்னதாக ராஜீப் பானர்ஜியைத் தவிர, பைஷாலி டால்மியா மற்றும் பிரபீர் கோசல் ஆகியோர் கட்சிக்கு எதிராக பகிரங்கமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலர் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ள நிலையில், மற்றவர்கள் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஹல்தாரும் கட்சி தலைமைக்கு எதிராக பேசி வருகிறார். பா.ஜ.க தலைவர் சோவன் சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியாக தீபக் ஹல்தார் கருதப்படுகிறார். எனவே விரைவில் பாஜகவில் ஐக்கியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவுள்ள 2021 சட்டசபைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் ஆளும் ​​திரிணாமுல் காங்கிரஸின் 17 எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி., காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து தலா மூன்று மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒருவர் பாஜகவுக்கு தாவியுள்ளனர்.

இந்நிலையில், பிப்ரவரி முடிவதற்குள், திரிணாமுல் கட்சியிலிருந்து அனைவரையும் வெளியே கொண்டுவருவோம் என சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி சவால் விட்டுள்ளார்.

Views: - 0

0

0

1 thought on “மம்தா பானர்ஜிக்கு அடிமேல் அடி..! மேலும் ஒரு எம்எல்ஏ கட்சியிலிருந்து விலகல்..!

Comments are closed.