கரைபுரண்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடிசை : 5 பேரை மீட்க பேரிடர் குழு போராட்டம்!!

27 November 2020, 5:24 pm
Rescue - Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் மாவட்டம் பீலேரு அருகே நதிக்கரையில் இருந்த குடிசை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், குடிசையில் வசித்து ஐந்து பேர் மறு கரையில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பீலேரு சமீபத்தில் பிஞ்சா நதி உள்ளது. நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை தொடர்ந்து பிஞ்சா நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிஞ்சா நதிக்கரையில் ஆக்குலேறுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி சீதாராமையா குடிசை போட்டு வாசித்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சீதாராமையாவின் குடிசை திடீரென்று இன்று காலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அப்போது சீதாராமையா குடும்பத்தினர் குடிசையில் இருந்தனர்.

சீதாராமையா குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் குடிசையின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து நதியின் மறு கரையில் கரை ஏறி அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

பிஞ்சா நதியின் மறு கரையில் சீதாராமையா குடும்பத்தினர் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் அடிப்படையில், ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், போலீசார் தீயணைப்பு படையினர் ஆகியோர் அங்கு வந்து சேர்ந்தனர்.

பிஞ்சா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அவர்களை உடனடியாக மீட்க இயலாது என்பதால், குடும்பத்தினருக்கு கிரேன் மூலம் உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. பிஞ்சா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் மூலம் சீதாராமையா குடும்பத்தினரை மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.