நீட் தேர்வுக்கு எதிர்ப்பு : நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்..!

14 September 2020, 8:53 am
Quick Share

நீட்டுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்து டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த சூழலில், தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் மாணவி ஒருவர் உட்பட 2 மாணவர்கள் என மூன்று பேர் பரிதாபமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர். தமிழகத்தையே நிலைகுலைய வைத்துள்ள இந்த சம்பவம் மக்கள் மத்தியில் உணச்சி பூர்வமான கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 2016ஆம் ஆண்டு சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017 முதல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்து வருகிறது.

அதே நேரம், நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலை தொடர்கிறது. அரியலூர் அனிதா தான் நீட் தேர்வு காவு வாங்கிய முதல் மாணவி. அவரை தொடர்ந்து, விழுப்புரம் பிரதீபா, சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி, கோவை சுபஸ்ரீ என நீட் மரணங்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட்டுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்து டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Views: - 5

0

0