மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த 2 எம்பிக்கள் யார் தெரியுமா? பரபர பின்னணி!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2023, 9:42 pm
Parliament - Updatenews360
Quick Share

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த 2 எம்பிக்கள் யார்? பரபர பின்னணி!!!

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் ‘நாரி சக்தி வந்தன் மசோதா’ மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் முதல் நாளில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று லோக்சபாவில் விவாதிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துப் பேசினர். இதையடுத்து, இந்த மசோதா வாக்குப்பதிவுக்கு விடப்பட்ட நிலையில், அவையில் இருந்த 454 எம்.பிக்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2 எம்.பிக்கள் மட்டுமே இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இன்று இந்த மசோதா வாக்கெடுப்பு நடைபெற்றபோது நாடாளுமன்ற மக்களவை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த எம்.பி.க்களில் 2 பேர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் மற்றொரு எம்.பி.யும் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அகில இந்திய மஜ்லீஸ் இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, இந்த மசோதாவுக்கு ஒரு திருத்தத்தை முன்வைத்து, அதன் மீது பிரிவு வாக்கெடுப்பைக் கோரினார்.

ஆனால் அவரது கோரிக்கை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார். மற்றொரு எம்.பியான இம்தியாஸ் ஜலீலும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

அசாதுதீன் ஒவைசி இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசுகையில், “இந்த மசோதா முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. மோடி அரசு ‘சவரனா’ பெண்களுக்கு மட்டுமே பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்புகிறது. இது ஒரு ஓபிசி எதிர்ப்பு மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு மசோதா. மக்கள்தொகையில் 7% முஸ்லிம் பெண்கள். ஆனால் இந்த நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் 0.7 சதவீதம் மட்டுமே உள்ளனர்.” என்று விமர்சித்தார்.

எனினும், 3ல் 2 பங்கு ஓட்டுக்கு மேல் மசோதாவுக்கு ஆதரவாகப் பதிவானதையடுத்து, மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதா தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே இந்த மசோதா அமலுக்கு வர உள்ளது.

Views: - 242

0

0