மீராபாய் சானுவுக்கு லைப்டைம் செட்டில்மென்ட்: பீட்சா நிறுவனம் அளித்த வித்தியாசமான வாக்குறுதி..!!

Author: Aarthi Sivakumar
25 July 2021, 6:00 pm
Quick Share

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவின் ஆசையை நிறைவேற்றிய டோமினோஸ் பீட்சா நிறுவனம் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்சா தருவதாக உறுதியளித்துள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது.

49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ தூக்கி 4 விதமான முயற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்துள்ளதையடுத்து, அவருக்கு ரூ.ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு காணொலி வாயிலாக அளித்த பேட்டியில், ”நான் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக எனக்குப் பிடித்த பல உணவுகளை உண்ணாமல் மிகுந்த டயட்டில் இருந்தேன். தற்போது வெள்ளிப்பதக்கம் வென்றுவிட்டதால் இனிமேல் பிடித்த உணவுகளை சாப்பிட காத்திருக்க முடியாது. அதிலும் எனக்குப் பிடித்த பீட்சாக்களை சாப்பிட காத்திருக்க முடியாது.

முதலில் நான் பீட்சா சாப்பிடப் போகிறேன், நீண்டகாலமாக நான் பீட்சா சாப்பிடவில்லை. இந்த நாளுக்காகத்தான் நீண்டகாலமாகக் காத்திருந்தேன். முதலில் எனக்கு பீட்சா வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனை கண்ட டோமினோஸ் பீட்சா நிறுவனம், சானுவின் ஆசையை தாங்கள் நிறைவேற்றுவதாகக் கூறி அவருக்கு பீட்சா வழங்குகிறோம் எனத் தெரிவித்தது. அதுமட்டும்லலாமல், இந்த ஒருமுறை மட்டுமல்லாமல் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்சாக்களை டோமினோஸ் நிறுவனம் வழங்கும் என உறுதியளித்துள்ளது.

Views: - 273

0

0