‘சுஹைல் நல்லவன் இல்லப்பா…நீங்க சொன்னது சரிதான்’: வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்த கணவன்…சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை..!!

Author: Aarthi Sivakumar
24 November 2021, 5:28 pm
Quick Share

கேரளா: வரதட்சணை கேட்டு சட்டக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலுவா மாவட்டத்தில் உள்ள இடையபுரம் பகுதியை சேர்ந்தவர் மோஃபியா பர்வீன். தொடுபுழாவில் மூன்றாமாண்டு சட்டம் படித்து வந்தார். இவருக்கும் இருமலப்பாடியை சேர்ந்த முகமது சுஹைல் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் காதல் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு முன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறிய சுஹைல், பிறகு சினிமாவுக்கு கதை எழுதிக் கொண்டிருப் பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் அதற்காக 40 லட்சம் தேவைப்படுவதாகவும் அதை மோஃபியாவின் வீட்டில் வாங்கித் தருமாறும் கேட்டுள்ளார்.

வரதட்சணையை விரும்பாத மோஃபியா, இதற்கு மறுப்பு தெரிவித்ததால் புகுந்த வீட்டுக்காரர்கள் அந்த பெண்ணை உடல் அளவிலும், மனதளவிலும் டார்ச்சர் செய்துள்ளனர். அவ்வப்போது இவர்களது கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாத தனது மகள் மோஃபியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆலுவா காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து அந்த காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதீர், மோஃபியா மற்றும் சுஹைலின் குடும்பத்தினரை வரழைத்து பேசினார். இதனிடையே சுஹைலும் தலாக் நோட்டீஸை மோஃபியாவின் குடும்பத்திற்கு வழங்குமாறு மசூதியில் பதிவு செய்திருந்தார். ஆனால் அங்கிருந்தவர்கள் தலாக் என்பது பழங்காலத்து முறை, எனவே விவாகரத்து வேண்டுமானால் சட்டப்படி செல்லும்படி கூறிவிட்டார்.

காவல்நிலையத்தில், சுஹைல் மோஃபியா மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதால், அவரை மோஃபியா அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோஃபியாவிடம் இன்ஸ்பெக்டர் சுதிர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அதனால் மோஃபியாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு அவர் சோர்வாக இருந்ததாகவும் அவரது தந்தை தெரிவித்தார். இதே நிலையில் வீட்டிற்கு வந்த சில மணி நேரத்தில் மோஃபியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் “எனது சாவுக்கு கணவர் சுஹைல், அவரது பெற்றோர் யூசூப்- ருகியா, ஆலுவா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர் ஆகியோர் தான் காரணம். அப்பா நீங்கள் சொன்னது சரி. சுஹைல் நல்லவன் கிடையாது என எழுதியிருந்தார். இதையடுத்து இன்றைய தினம் முகமது சுஹைல் அவரது பெற்றோரை கோத்தமங்கலம் போலீஸ் கைது செய்துள்ளது.

ஏற்கெனவே கேரளாவில் விஸ்மயா தற்கொலை, பாம்பை ஏவிவிட்டு உத்ரா கொலை உள்ளிட்ட சம்பவங்கள் வரதட்சிணை கொடுமையால் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மோஃபியாவும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 220

0

0