“சுஷாந்த் மரணத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை”..! ரியா சக்ரவர்த்தியின் கைது குறித்து என்சிபி அதிரடி..!

29 September 2020, 8:14 pm
rhea_updatenews360
Quick Share

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள்  வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் ஆகியோர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் இன்று போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்தது.

விசாரணைக்கும் ராஜ்புத்தின் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இது போதைப்பொருள் நெட்வொர்க் தொடர்பான வழக்கு என்றும் என்சிபி நீதிமன்றத்தில் கூறியது.

“வாதங்கள் முழுவதும், இது சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்குடன் தொடர்புடையது என்று விண்ணப்பதாரர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த விசாரணைக்கும் சுஷாந்த் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று என்சிபியின் வழக்கறிஞர் ஏ.எஸ்.ஜி. அனில் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ரியா மற்றும் அவரது சகோதரர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. செப்டம்பர் 8’ஆம் தேதி, சுஷாந்திற்கு போதைப்பொருள் வாங்கியதாக ரியா சக்ரவர்த்தியை என்சிபி கைது செய்தது. ரியா சக்ரவர்த்தி மேலும் பலருடன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருமே ஒருவருக்கொருவர் ஒன்றோடொன்று இணைந்திருப்பதாகவும், வழக்கமான தொடர்புகள் மூலம் போதைப்பொருட்களை வாங்குவதாகவும் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

போதைப்பொருள் விசாரணையில் பாலிவுட் பிரபலங்கள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரிடமும் என்சிபி இதுவரை விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.