தீவிரமடையும் கொரோனா 2வது அலை: சிகிச்சை மையங்களாக மாறும் ரயில் பெட்டிகள்…!!

18 April 2021, 4:29 pm
Quick Share

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. 2வது அலையால் அரசும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திணறி வருகின்றன. மேலும் பெரும்பாலான மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே கூறியதாவது,

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 4002 பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும். இந்த ரயில் பெட்டிகளால் சந்தேகப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Views: - 36

0

0