கொரோனா சமயத்தில் தேர்தல் நடத்துவது எப்படி..? மூன்று நாட்களுக்குள் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு..! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
18 August 2020, 7:03 pmகொரோனா தொற்றுநோய்களின் போது தேர்தல்களை நடத்துவதற்கு மூன்று நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் பரந்த அளவிலான வழிகாட்டுதல்களைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான பரந்த வழிகாட்டுதல்களை வெளியிடுவது குறித்து இன்று நடந்த தேர்தல் கமிஷன் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இவை அனைத்தையும் பரிசீலித்த பின்னர், மூன்று நாட்களுக்குள் பரந்த வழிகாட்டுதல்களை வடிவமைக்க ஆணையம் உத்தரவிட்டது.” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில அல்லது மாவட்டத்திற்கான ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.
பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 29’ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் மற்றும் மழை காரணமாக பல இடைத்தேர்தல்கள் சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்டன. புதிய அட்டவணை எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பீகாரில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த, முககவசம் அணியவும், சமூக இடைவெளிகளை பராமரிக்கவும் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.