கனமழை எதிரொலி : பழம்பெரும் மன்னர் காலத்து கோட்டையில் விரிசல்!!

15 October 2020, 6:13 pm
King Castle Crack - Updatenews360
Quick Share

தெலுங்கானா : பெய்து வரும் தொடர் மழைக்கு 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட மன்னர் காலத்து கோட்டை இடிந்து சேதமடைந்தன.

வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சீற்றத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜனகாம் மாவட்டம் கிலாசபுரம் கிராமத்தில் பதினேழாவது நூற்றாண்டில் சர்வாய் பாப்பன்னா என்பவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் கட்டிய பழம்பெருமை வாய்ந்த கோட்டை மதில் சுவர் இன்று இடிந்து விழுந்தது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கோட்டை சுவர்கள் நனைந்து நேற்று மாலை விரிசல் ஏற்பட்டது.

கோட்டை மதில் சுவர் அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் இதனால் வீடுகளை விட்டு வெளியேறி நேற்றுமுதல் வேறு இடங்களில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று கோட்டை மதில் சுவர் இடிந்து விழுந்தது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக சர்வாய் பாப்பன்னா கோட்டை விளங்குகிறது.
எனவே இந்த கோட்டையை மேம்படுத்தி சீர்செய்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்க தெலுங்கானா மாநில சுற்றுலாத்துறை முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கோட்டை மதில் சுவர் இன்று இடிந்து விழுந்தது. இன்னும் இரண்டு நாட்கள் இதே நிலை நீடித்தால் கோட்டை முழுவதுமாக இடிந்து விடும் என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கோட்டை சுவர்களின் பரிதாப நிலை பற்றி எத்தனையோ முறை அதிகாரிகளுக்கு நேரிலும், கடிதங்கள் மூலமும் தகவல் கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர். இதனால் மிகப்பழமையான கட்டிடம் ஒன்றை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கிலாசாபுரம் பொதுமக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

Views: - 33

0

0