தேர்தல் ஜனநாயகம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வல்ல..! மெஹபூபா முப்தி கருத்தால் சர்ச்சை..!

29 November 2020, 7:07 pm
mehbooba_updatenews360
Quick Share

பி.டி.பி தலைவரும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான மெஹபூபா முப்தி இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, காஷ்மீர் பிரச்சினைக்கு தேர்தல் முறை தீர்வாகாது எனத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு தேர்தல் தீர்வு அல்ல என்று கூறி, காஷ்மீரில் ஜனநாயகத்தை மலர வைக்கும் மத்திய அரசின் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் (டிடிசி) தேர்தலை மெஹபூபா முப்தி விமர்சனம் செய்தார். ரோஷ்னி திட்டம் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், இது சில நபர்களால் மோசடி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“இது எங்கள் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். இது ஒரு மோசடி அல்ல.” என்று அவர் ரோஷ்னி சட்டம் குறித்து மேலும் கூறினார்.

இந்நிலையில் மெஹபூபா முப்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, டி.டி.சி தேர்தலின் முதல் கட்டத்தில் பெரும் வாக்குப்பதிவு ஏற்பட்டதால் அவர் விரக்தியடைந்து இவ்வாறு பேசுவதாக தெரிவித்தார்.

ஆர்ட்டிகிள் 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு-காஷ்மீரில் நடந்த முதல் தேர்தலில், கிட்டத்தட்ட 52 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

எட்டு கட்டமாக நடக்கும் டி.டி.சி தேர்தல்களில் முதல் சுற்று வாக்குப்பதிவு, குல்காமில் நடந்த ஒரு சிறிய கல்வீச்சு சம்பவம் தவிர அமைதியாக நிறைவேறியது. “முதல் கட்டத்தில் 51.76 சதவீத வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். ஜம்மு பிரிவில் 64.2 சதவீதமும், காஷ்மீர் பிரிவில் 40.65 சதவீதமும் பதிவாகியுள்ளது.” என்று மாநில தேர்தல் ஆணையர் கே.கே. சர்மா ஜம்முவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பேசிய மெஹபூபா முப்தி, சீனாவுடன் சமாதானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது, ஏன் பாகிஸ்தானுடனும் நடத்தக் கூடாது என்று கேள்வியெழுப்பியதோடு, மத்திய அரசை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு வலியுறுத்தினார்.

Views: - 17

0

0