சாலையில் கிடந்த பூனை உடல்; யானையின் நெகிழ்ச்சி செயல் வைரல்

1 March 2021, 8:28 am
Quick Share

சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த பூனையை மிதிக்காமல், யானை ஒன்று நகர்ந்து செல்லும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பல நேரங்களில் மனிதன் தனது கட்டுப்பாடுகளை இழந்து மிருகத் தன்மையுடன் நடந்து கொள்கிறான். அப்படி அவன் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களிலும், அவனுக்கு ஏற்படும் இழப்புகள் ஏராளம். ஆனால் பல இடங்களில் இரக்க குணங்களில் மனிதனை மிஞ்சி விடுகின்றன விலங்குகள். அப்படி ஒரு வீடியோ கிளிப் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துள்ளது.

அந்த வீடியோவில், கோவில் யானை ஒன்று தன் பாகனுடன் சாலையில் நடந்து செல்கிறது. அப்போது, பூனை ஒன்று விபத்தில் சிக்கி சாலையில் உயிரிழந்து கிடக்கிறது. இதைக்கண்ட யானை, இறந்த பூனையை மிதித்து விடக்கூடாது என்பதற்காக, தான் நடந்து செல்லும் பாதையிலிருந்து மாறி, வலதுபுறமாக விலகி செல்கிறது.

செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகள், டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்திலும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும், நாகரிகத்துடன் நடந்து கொண்ட யானையின் இந்த செயலுக்காக நெகிழ்ச்சியான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், இதே போல் ஒரு யானை வீடியோ ஒன்று வைரலாகி இருந்தது. ஆனால் அந்த வீடியோவில், மனிதர்களிடம் அடிவாங்கியது யானை. மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரம் கோவில்கள், திருமடங்களில் உள்ள யானைகளுக்கு நடந்த நலவாழ்வு முகாமில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் தாக்கிய வீடியோ தான் அது. விசாரணைக்குப்பின், பாகன்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0