மேற்கு வங்கத்தில் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு…45க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

Author: Aarthi Sivakumar
14 January 2022, 8:26 am
Quick Share

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்திற்குள்ளானது.

விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோடியுடன் பேசி, மீட்புப் பணிகள் குறித்த நிலைமையை விவரித்துள்ளதாகவும் விரைவான மீட்புப் பணிகளுக்கான நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 165

0

0