ஆன்லைன் கிளாஸ் புரியாததால் வீட்டைவிட்டு ஓடிப்போன 8ம் வகுப்பு சிறுவன்…

22 January 2021, 2:31 pm
Quick Share


 
ஆன்லைன் வகுப்பில் நடத்தப்படும் பாடம் புரியாததால், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன், வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
 
கொரோனா வைரஸ் தொற்று, சர்வதேச நாடுகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில்,இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக, பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் ராண்டர் பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், கொரோனா ஊரடங்கின் காரணமாக, ஆன்லைன் முறையில் பள்ளிப்பாடங்களை படித்து வந்தார். அந்த மாணவர், திடீரென்று மாயமானார். மகனை தேட செய்யப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால், பெற்றோர் வேறுவழியின்றி, ராண்டர் போலீசில் புகார் அளித்தனர்.

மாணவரின் வீட்டிற்கு வந்த போலீசார், அங்கு ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நான் உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்து வந்துள்ளேன். இதன்காரணமாக, நான் வீட்டில் இருந்து வெளியேறுகிறேன். என்னால், ஆன்லைன் வகுப்பில் கற்றுத்தரும் பாடங்களை புரிந்து கொள்ள இயலவில்லை. என்னை மன்னிக்க வேண்டுமென்று, மாணவன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தான்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த பையந்தர் பகுதியில் இருக்கும் உறவினர், மாணவரின் தந்தையை தொடர்பு கொண்டு,தங்கள் மகன் இங்கு வந்து சேர்ந்துள்ளான் என்பதை தெரிவித்த பின்னரே, அவனின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, ராண்டர் போலீஸ் ஸ்டேசன் உயர் அதிகாரி கூறியதாவது, அந்த பையன், சிறுவயதில் இருந்தே பையந்தர் பகுதியிலேயே இருந்துள்ளான். தற்போது தான் அவன் சூரத் வந்துள்ளான். அவனால்,சூரத்தில் இருக்க பிடிக்கவில்லை என்பதாலேயே அவன் பையந்தர் சென்றுள்ளான். ஆனால், அவன் எப்படி பையந்தருக்கு சென்றான் என்ற விபரம் தெரியவில்லை என அவர் கூறினார்.