ரூ.2000 நோட்டுக்கு விரைவில் தடை… ரூ. 90 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி ரொக்கம்.. மோசடி கும்பல் கைது..!

22 September 2020, 5:53 pm
andra fake money - - updatenews360
Quick Share

திருப்பதி: மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய இருப்பதாகக் கூறி, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை குறைந்த விலைக்கு தருவதாகச் சொல்லி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த காக்கிநாடாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் போலி ரூபாய் நோட்டு கும்பல் ஒன்று, தங்களிடம் 200 கோடி ரூபாய் அளவிற்கு பெட்டி பெட்டியாக 2000 ரூபாய் இருப்பது போல் வீடியோ ஒன்றை தயார் செய்தது. அந்த வீடியோவை நாகபிரசாத் என்பவரிடம் காண்பித்து, மத்திய அரசு விரைவில் 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய உள்ளது. எனவே எங்களிடம் இருக்கும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை குறைந்த தொகைக்கு விற்பனை செய்ய இருக்கிறோம். 90 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்ற முயன்றனர்.

சந்தேகமடைந்த நாக பிரசாத் அளித்த தகவலின் பேரில், காக்கிநாடா போலீசார், போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட முயன்ற விசாகப்பட்டினத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை கைது செய்தனர். ஒரு வீட்டில் பெட்டி பெட்டியாக அடிக்க வைக்கப்பட்டிருந்த போலி ரூபாய் நோட்டுகள், அவற்றை தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 10

0

0