பட்ஜெட் தாக்கல் அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி..! வேளாண் அமைப்புகள் புதிய அறிவிப்பு..!

25 January 2021, 8:15 pm
farmers_at_delhi_border_updatenews360
Quick Share

நாளை குடியரசு தினத்தன்று வேளாண் அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அமைப்புகள், பிப்ரவரி 1’ஆம் தேதி வருடாந்த யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யும் சமயத்தில், வெவ்வேறு இடங்களிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து செல்ல உள்ளதாக அறிவித்துள்ளன. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவர்களின் போராட்டம் தொடரும் என்றும் கிரந்திகாரி கிசான் யூனியனின் தர்ஷன் பால் கூறினார்.

“பிப்ரவரி 1’ம் தேதி பட்ஜெட் நாளில் நாங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து நடைபயணமாக பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வோம். நாளைய டிராக்டர் பேரணியைப் பொருத்தவரை, இது அரசாங்கத்திற்கு எங்கள் பலத்தைப் பற்றிய ஒரு கருத்தைத் தரும். மேலும் கிளர்ச்சி என்பது பஞ்சாப் அல்லது ஹரியானாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலும் நடக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள்.” என்று அவர் கூறினார்.

“டிராக்டர் அணிவகுப்புக்காக வந்த விவசாயிகள் திரும்பிச் செல்ல மாட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து இருப்பார்கள். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். எங்கள் நிலைப்பாடு அப்படியே உள்ளது” என்று தர்ஷன் பால் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதற்கிடையே குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் நாளை விவசாயிகளால் முன்மொழியப்பட்ட டிராக்டர் அணிவகுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ராஜபாதை மற்றும் டெல்லியின் பல எல்லைப் புள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆயுதப் படை வீரர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாய சங்கங்கள் தங்கள் அணிவகுப்பு மத்திய டெல்லிக்குள் நுழையாது என்றும் அது அதிகாரப்பூர்வ குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னரே தொடங்கும் என்றும் கூறியது.

சிங்கூ, திக்ரி மற்றும் காசிப்பூர் ஆகிய மூன்று எல்லைப் புள்ளிகளிலிருந்து நகரத்திற்குச் செல்லும் தங்கள் அணிவகுப்பில் சுமார் இரண்டு லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் என்றும் வேளாண் அமைப்புகள் கூறியுள்ளன.

Views: - 0

0

0