பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல்..! இன்றோடு முடிவுக்கு வருகிறதா விவசாயிகள் போராட்டம்..?

1 December 2020, 12:38 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

ஒரு பக்கம் மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியை முடக்கி வரும் விவசாய அமைப்புகள், மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர். பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் உள்ள விஜியன் பவனில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் 36 விவசாயிகள் சங்கங்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அரசாங்கத்தின் புதிய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததால், மூன்று விவசாயச் சட்டங்கள் தொடர்பான முட்டுக்கட்டைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கிடையில், மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்பதையும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அதற்கு பதிலாக அதன் பிரதிநிதிகள் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை நீக்க முயற்சிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அகற்றி விவசாயத் துறையை நிறுவனமயமாக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

“இன்று பிற்பகல் 3 மணிக்கு உழவர் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது” என்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறினார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நாதாவின் இல்லத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு பிறகு அவர் இதைத் தெரிவித்தார்.

இது தொடர்பான மற்றொரு அறிவிப்பில், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகிய மூன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை அரசாங்கம் அறிவித்துள்ளது.

விவசாயிகளின் தலைவர்களை அடைவதற்கான வழிகள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களிடையே கலந்தாலோசித்த பின்னர் நேற்று மத்திய அரசிடமிருந்து அறிவிப்பு வந்தது. 
இதற்கிடையில், வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால், கிராந்திகாரி கிசான் யூனியன், ஜம்முஹாரி கிசான் சபா, பாரதிய கிசான் சபா, குல் ஹிந்த் கிசான் சபா, கிருதி கிசான் யூனியன் மற்றும் பஞ்சாப் கிசான் யூனியன் உள்ளிட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக நவம்பர் 13 கூட்டத்தில் எந்தவொரு முடிவையும் எட்டாமலேயே போன நிலையில், இன்றைய கூட்டம் புதிய வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளைத் தீர்த்து, போராட்டத்திற்கு முடிவுகட்ட அரசு தீர்க்கமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0