இரும்பு ஆணிகளுக்கு அருகே பூச்செடிகள்! விவசாயிகளின் ரிப்ளே வைரல்
7 February 2021, 10:20 amகாஸிப்பூர் எல்லையில், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க, சாலைகளில் இரும்பு ஆணிகளை போலீசார் பதித்துள்ள நிலையில், அதன் அருகிலேயே பூச்செடிகளை நட்டு, விவசாயிகள் பதில் கொடுத்துள்ளனர். இந்த ஒற்றை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணி வன்முறையில் முடிய, விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் நகருக்குள் நுழையாமல் இருப்பதற்காக, பெரிய ஆணிப் பலகைகளை சாலைகளில் அமைத்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீசார் சாலையில் அடித்த ஆணிகளுக்கு அருகில் பூச்செடிகளை விவசாயிகள் நட, அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி – உத்தரிப்பிரதேச எல்லையான காஸிப்பூரில், போலீசார் சாலைகளில் அமைத்திருக்கும் இரும்பு ஆணிகளுக்கு அருகிலேயே, அழகிய ரோஜா செடிகளையும், பூச்செடிகளையும் நட்டு விவசாயிகள், போலீசாருக்கு பதிலடி தந்துள்ளனர். இது தங்களின் மனநிலை மற்றும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி – டாபர் திராஹா சாலை ஓரத்தில், முகம் சுளிக்கும்படி அசிங்கமாக இருந்த ஒரு இடத்தை சுத்தப்படுத்திய விவசாயிகள், அங்கு ஒரு பூந்தோட்டத்தை அமைத்துள்ளனர். இது அந்த இடத்தையே அழகாக மாற்றி உள்ளது. போலீசாரின் நடவடிக்கைக்கு விவசாயிகள் அளித்துள்ள இந்த பதிலடி, சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நெட்டிசன்களும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.
0
0