குடியரசு தினத்தன்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணி: டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்..!!

18 January 2021, 10:38 am
tractor rally - updatenews360
Quick Share

புதுடெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் புறப்பட்டு செல்கின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். அதேநேரம் சட்டங்களை திரும்பப்பெறுவதை தவிர வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க தயார் என மத்திய அரசு கூறி வருகிறது.

இதனால் இதுவரை நடந்த 9 சுற்று பேச்சுவார்த்தைகளும் எந்தவித பலனையும் அளிக்கவில்லை. இரு தரப்புக்கு இடையேயான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இதற்கிடையே புதிய வேளாண் சட்டங்களுக்கு கடந்த 11ம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது. மேலும் இந்த சட்டங்கள் தொடர்பாக சிறப்பு குழு ஒன்றையும் அமைத்துள்ள உச்சநீதிமன்றம், இந்த குழுவிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை கூறுமாறும் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் இந்த குழுவை ஏற்காத விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

முன்னதாக தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதன் ஒரு பகுதியாக, டெல்லியில் குடியரசு தினத்தன்று பிரமாண்ட டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர். இதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சம் டிராக்டர்கள் டெல்லியில் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்து தாங்கள் 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை போராட்டம் நடத்த தயாராகி உள்ளதாக பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் குடியரசு தினத்தன்று, திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்றிருப்பவர்கள், ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பி வருவதற்கு விவசாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Views: - 7

0

0