வேளாண் சட்டங்களுக்கு தொடரும் எதிர்ப்பு: திக்ரி எல்லையில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்..!!

28 January 2021, 1:41 pm
thkri protest - updatenews360
Quick Share

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திக்ரி எல்லையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் கடும் வன்முறை வெடித்தது. விவசாயிகளில் ஒரு தரப்பினர் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர்.

அதன்பின்னர் விவசாயிகள் தங்கள் அமைப்பின் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர். இதில், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார். போலீசார் சுட்டதால் விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறியபோது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்தனர். விவசாயிகள் தாக்கியதில் ஏராளமான போலீசார் காயமடைந்துள்ளனர். டெல்லி போராட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணியை முடித்து கொண்டு திரும்பிய விவசாயிகள், திக்ரி எல்லையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘அமைதியான வழியில் போராடுவது எங்களின் ஜனநாயக உரிமை’ ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும்’ என்பது போன்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Views: - 0

0

0