டெல்லியில் டிராக்டர் பேரணி: போலீசாரின் அறிவுரையை ஏற்க மறுத்த விவசாயிகள்..!!
21 January 2021, 8:30 amபுதுடெல்லி: குடியரசு தினத்தன்று மாற்றுப் பாதையில் டிராக்டர் பேரணி செல்ல போலீஸார் அறிவுறுத்திய நிலையில், அதனை விவசாயிகள் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தின் மற்றொரு அடையாளமாக குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் அறிவித்தனர். இதனை அடுத்து விவசாய சங்கத் தலைவர்கள் டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகளை புதன்கிழமை சந்தித்தனர்.
அதிகாரிகளிடம் பேசிய விவசாய சங்கத்தினர் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி ஏற்கெனவே திட்டமிட்டபடி டிராக்டர் பேரணியை மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தனர். டெல்லி விஞ்ஞான் பவனில் உயர்மட்டக் காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பில், விவசாய சங்கத் தலைவர்கள் தங்கள் பேரணிக்கான பாதை மற்றும் ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர்.
அந்த விவாதத்தின் போது விவசாயிகள் தங்கள் டிராக்டர் பேரணியை ரிங்சாலை வழியே நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ஓங்கர் சிங் அகவுல் கூறியதாவது, எங்கள் டிராக்டர் பேரணியை குண்ட்லி-மானேசர்-பல்வால் அதிவேக நெடுஞ்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று போலீஸார் அறுவுறுத்தினார்கள்.
மேலும், அதுகுறித்து மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். போலீஸார் ஒதுக்கியுள்ள பாதை வழியே செல்ல உடன்பட முடியாது எனவும், ஏற்கெனவே திட்டமிட்ட ரிங் சாலையில் எங்கள் பேரணி நடைபெறும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம். இதனால் நாளை மீண்டும் போலீஸ் அதிகாரிகளுடன் மற்றொரு சந்திப்பு நடைபெற உள்ளது என ஓங்கர் சிங் அகவுல் தெரிவித்தார்.
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்துவதற்கு விவசாயிகளுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இந்தியத் தலைமை நீதிபதியின் உத்தரவில், ‘காவல்துறைதான் முடிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். நாங்கள் உத்தரவுகளை நிறைவேற்றப் போவதில்லை. நடவடிக்கை எடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
0
0