ஆப்பிரிக்கர்கள் போல இருக்கும் தென்னிந்தியர்கள்… காங்., மூத்த தலைவரால் வெடித்த சர்ச்சை ; பாஜக கொடுத்த பதிலடி!!

Author: Babu Lakshmanan
8 May 2024, 2:47 pm
Quick Share

தென்னிந்தியாவைச் சேர்ந்த மக்கள் ஆப்ரிக்கர்கள் போல இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரபூர்வ ஆலோசகராக இருந்த சாம் பிட்ரோடா, அண்மையில் சொத்துரிமை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, வரை பாஜக தலைவர்கள் முதல் பிரதமர் வரை அந்தக் கருத்தை எங்கு போனாலும் பேசி வருகின்றனர். ஆனால், அது சாம் பிட்ரோடாவின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் ஜகா வாங்கியது.

இந்த நிலையில், இந்தியர்கள் குறித்து சாம் பிட்ரோடா பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், . இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களாகவும், தெற்கே உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கிறார்கள் என்றும், இவர்களை ஒருங்கிணைத்த பெருமை காங்கிரசை சாரும் என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க: சென்னையில் மற்றொரு சம்பவம்… சிறுவனை கடித்துக் குதறிய நாய் ; கண்ணீர் மல்க பெற்றோர் வைக்கும் கோரிக்கை..!!

அவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சாம்பிட்ரோடாவின் இந்தக் கருத்து குறித்து பேசிய பிரதமர் மோடி, தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவது எனக்கு கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

அதேபோல, பாஜகவின் இமாச்சல பிரதேசம் மண்டியின் வேட்பாளரான கங்கனா ரனாவத், ”சாம் பிட்ரோடா, ராகுல் காந்தியின் வழிகாட்டி. இந்தியர்கள் மீதான இனவெறி மற்றும் பிளவுபடுத்தும் அவரது அவதூறுகளைக் கேளுங்கள். அவர்களின் முழு சித்தாந்தமும் பிரித்து ஆட்சி செய்வது பற்றியதாகும். சக இந்தியர்களை சீனர்கள் என்றும் ஆப்பிரிக்கர்கள் என்றும் அழைப்பது வேதனை அளிக்கிறது. காங்கிரசுக்கு வெட்கக்கேடு!” என்று தனது எக்ஸ் தள பதிவில் சாடி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 கட்டங்களே முடிந்துள்ளன. இந்த நிலையில், சாம் பிட்ரோடாவின் இந்தப் பேச்சுக்கள் தேர்தலில் எதிரொலிக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Views: - 118

0

0

Leave a Reply