மீண்டும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாரா பாரூக் அப்துல்லா..? தேசிய மாநாட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!

30 October 2020, 3:01 pm
farooq_abdullah_detained_updatenews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் ஆலயத்தில் மிலாது நபி தினத்திற்கு பிரார்த்தனை செய்வதற்காக தனது வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது தடுக்கப்பட்டார் என அவரது கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் அரசுத் தரப்பில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

“ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் கட்சித் தலைவர் டாக்டர் பாரூக் அப்துல்லா அவரது இல்லத்திலிருந்து வெளியேறி தர்கா ஹஸ்ரத்பாலில் பிரார்த்தனை செய்வதற்கு செல்ல முயன்றபோது அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி பிரார்த்தனை செய்வதற்கான அடிப்படை உரிமையை, குறிப்பாக மிலாது நபி சமயத்தில் மீறுவதைக் கண்டிக்கிறது” என தேசிய மாநாட்டுக் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஸ்ரீநகர் மக்களவை எம்பியான பாரூக் அப்துல்லா, தால் ஏரியின் கரையில் உள்ள ஹஸ்ரத்பால் சன்னதிக்குச் சென்று அங்கு பிரார்த்தனை செய்யவிருந்தார்.

முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட் 5’ஆம் தேதி, மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட்டனர்.

பின்னர் கடந்த பிப்ரவரியில் பாரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுவது ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 19

0

0

1 thought on “மீண்டும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாரா பாரூக் அப்துல்லா..? தேசிய மாநாட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..!

Comments are closed.