டிஜிட்டல் ஊடகங்களுக்கு புதிய அங்கீகாரம்: மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி..!!

18 October 2020, 11:05 am
digi media - updatenews360
Quick Share

டிஜிட்டல் ஊடகங்களுக்கு அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மரபு ரீதியான ஊடகங்களான அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிரத்யேக வசதிகள் மற்றும் அங்கீகாரங்களை டிஜிட்டல் ஊடகங்களுக்கும் வழங்கிட மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அக்.16ம் தேதி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களைப் போலவே டிஜிட்டல் ஊடக அமைப்புகளின் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், வீடியோகிராபர்கள், முதல் கட்டத் தகவல்களை பெறுவதற்கும் மற்றும் அணுகுதலைப் பெறவும் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் கூட்டத்தில் மற்றும் அது தொடர்பான உரையாடல்களில் பங்கேற்பதற்கான பத்திரிகை தகவல் மையத்தின் அங்கீகாரம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசின் பத்திரிகையாளர் அங்கீகார அடையாள அட்டை டிஜிட்டல் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படும். அதற்குரிய சலுகைகளும் வழங்கப்படும். ரயில் பயண சலுகையும் அளிக்கப்படும். மத்திய அரசின் தகவல் தொடர்பு பணியகம், கள அலுவலகத்தின் வாயிலாக டிஜிட்டல் விளம்பரங்களைப் பெறுவதற்கான தகுதி டிஜிட்டல் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சு, மின்னணு ஊடகத்தில் இருக்கும்சுய ஒழுங்கு படுத்தும் அமைப்புகளைப் போல, டிஜிட்டல் ஊடகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நலன்களை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வதற்கும் சுய கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்க முடியும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு டிஜிட்டல் ஊடகங்களுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.