எளிமையாக்கப்பட்ட மாநிலங்கள் கடன்பெறும் நடைமுறைகள் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!
27 August 2020, 7:19 pmடெல்லி : ரிசர்வ் வங்கியில் மாநில அரசுகள் கடன்பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக தொழில்துறை மற்றும் உற்பத்தி துறைகள் முடங்கிப் போயுள்ளன. இதனால், ஜி.எஸ்.டி. வரியை செலுத்த முடியாத நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி வசூலாகாததால், மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசால் கொடுக்க முடியவில்லை.
எனவே, தங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. 5 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், மாநில நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் மாநில அரசுகள் கடன் பெறலாம். மாநில அரசுகளுக்கு உதவ ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தும். கடன் பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன,” எனக் கூறினார்.
மேலும், காணொளி மூலம் பேசிய நிதித்துறை செயலர் பேசியதாவது :- கொரோனா தொற்று காரணமாக ஜி.எஸ்.டி. வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. இழப்பீடு சட்டப்படி வழங்க வேண்டும். நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 1.65 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
0
0