மலபார் கூட்டு போர் ஒத்திகை தொடக்கம்..! சீனாவுக்கு எதிராக அதிரடி வியூகம் வகுக்கும் குவாட் கூட்டமைப்பு..!

3 November 2020, 12:45 pm
malabar_exercise_updatenews360
Quick Share

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா கடற்படையினரிடையே நடக்கும் மலபார் போர் ஒத்திகையில் முதல் கட்டம் வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நான்கு நாடுகளின் மூலோபாய நலன்களில் வளர்ந்து வரும் ஒற்றுமையின் பிரதிபலிப்பாக இந்த போர் ஒத்திகை அமைகிறது.

கிழக்கு லடாக்கில் கிட்டத்தட்ட ஆறு மாத கால கசப்பான எல்லை மோதலில் இந்தியாவும் சீனாவும் அடைபட்டிருக்கும் நேரத்தில் இந்த போர் ஒத்திகை நடைபெறுகிறது. இந்தியா மட்டுமல்லாது ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் கடந்த சில மாதங்களாக சீனாவுடன் பலவிதமான பிரச்சினைகள் தொடர்பாக மோதலைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், ஆஸ்திரேலியா மலபார் கூட்டு போர் ஒத்திகையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று இந்தியா அறிவித்தது. முன்னதாக 1992 முதல் இந்தியாவும் அமெரிக்காவும் மலபார் கூட்டு போர் ஒத்திகையை வருடம் தோறும் நடத்தி வந்த நிலையில் 2015’இல் இது ஜப்பானும் இதில் இணைந்தது. ஆனால் சமீபத்தில் சீனாவின் உலகளாவிய அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவும் இணைகிறது.

போர் ஒத்திகையின் முதல் கட்டம் இன்று முதல் நவம்பர் 6 வரை இருக்கும். இரண்டாம் கட்ட போர் ஒத்திகையை நவம்பர் 17 முதல் 20 வரை அரேபிய கடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நேரடி தொடர்பு இல்லாமல், கடலில் மட்டும் நடத்தப்படும் இந்த கூட்டு போர் ஒத்திகை, நட்பு கடற்படைகளுக்கு இடையிலான உயர்நிலை ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் என்று இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Views: - 19

0

0

1 thought on “மலபார் கூட்டு போர் ஒத்திகை தொடக்கம்..! சீனாவுக்கு எதிராக அதிரடி வியூகம் வகுக்கும் குவாட் கூட்டமைப்பு..!

Comments are closed.