ஒரு பக்கம் கொரோனா… மறுபக்கம் மூளையில் கட்டி…! உயிருக்கு போராடும் முன்னாள் ஜனாதிபதி
11 August 2020, 9:29 amடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் கட்டி ஏற்பட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 13வது குடியரசு தலைவராக பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. அவருக்கு கொரோனா நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவலை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்ற போது, தமக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் முடிவில் கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆகவே, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு ஒருபக்கம் இருக்க, பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் மூளையில் இருந்து கட்டி நீக்கப்பட்டது. நேற்றிரவு நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.